சண்முகாநதி பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியதால், வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியாக செல்லாமல் பல கி.மீ சுற்றி சென்றனர்.

பழநியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சண்முகாநதி ஆறு. இந்த ஆற்றைக் கடந்துதான் உடுமலை, பொள்ளாச்சி, கோவை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் கைபிடி சுவர்கள் இடிந்து விழுந்தும், வாகனங்கள் செல்லும்போது அளவுக்கதிமாக அதிர்வடைந்தும் வந்தது. இதனால் பாலத்தை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் ரூ.4.99 கோடி மதிப்பீட்டில் 5 தூண்கள் கொண்ட இந்த பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் கைபிடி சுவர்கள் புதிதாக கட்டப்படுகிறது. அதிர்வுகளை தாங்கும் வகையில் பாலத்திற்கும், தூணிற்கும் இடையே பழுதாகி இருந்த பேரிங்குகள் அகற்றப்பட்டு, புதிய பேரிங்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக பாலத்தை ஜாக்கிகள் மூலம் தூக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது வாகனஓட்டிகள் சிலா சண்முகாநதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றில் இறங்கி வாகனத்தில் சென்றனர்.

இந்த காட்சியை படம் பிடித்த சிலர், பாலம் இடிந்து விட்டதாகவும், அதனால் வாகனங்கள் ஆற்றில் இறங்கி செல்வதாகவும் தவறான தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உலாவ விட்டனர். இந்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியது. இதன்காரணமாக பலர் தங்களது வாகனங்களை பெத்தநாயக்கன்பட்டி, மானூர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 13 கிலோமீட்டர் சுற்றி பழநி வந்தடைந்தனர். நீண்ட நேரத்திற்கு பின்பே, பாலம் இடிந்து விழுந்ததாக பரவிய தகவல் வதந்தி என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்து வழக்கம்போல் சீரடைந்தது.