கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான 2019-2020ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.பி.வி.எஸ்.சி. எனப்படும் கால்நடை மருத்துவம் மற்றும் இளநிலை தொழில்நுட்பப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர்.

தருமபுரியைச் சேர்ந்த சுவாதி 200க்கு 199.50 மதிப்பெண்களோடு மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  மேலும் 2-ம் இடம் பிடித்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேன் சில்வியா 200க்கு 199.25 மதிப்பெண்களை பெற்றார். 3-ம் இடத்தை 200க்கு 199 மதிப்பெண் பெற்று குமரியை சேர்ந்த ஹர்ஷா பிடித்துள்ளார். கால்நடை மருத்துவம் மற்றும் இளநிலை படிப்பிற்கு 14, 695 பேரும் உணவு தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 2, 427 பேரும் தகுதிப் பெற்று இருப்பதாகவும் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜுலை மூன்றாம் வாரம் நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கலந்தாய்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்துடன் கலந்தாய்விற்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரம் , அவர்களது மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கால்நடை மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்தி உள்ளோம், நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை கல்லூரிகளில் 80 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் கூறினார்.