சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் போலி நில ஆவணங்கள் காட்டி மோசடி. போலி நில ஆவணங்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  மீறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதில்  ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், போலி ஆவணங்கள் காண்பித்து 20 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இதுவரை ரூ.4 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது என சிபிசிஐடி  சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதிகள்,  போலி ஆவணங்கள் மூலம் , சுமார் ரூ.20 கோடி முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும், இழப்பீடு வழங்கியவர்களிடம் இருந்து  திரும்ப வசூலிக்க  உத்தரவிட்டு உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், இழப்பீட்டை திரும்ப பெறாவிடில், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.