திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா பண்டிகையையட்டி, சுமார் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை தீபத்திருவிழா உலக பிரச்சித்தி பெற்றது. 10நாட்கள் நடைபெறும்  இந்த ஆண்டு தீப திருவிழாவையொட்டி சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்றைய  (2-ம் நாள்) விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தீபத் திருவிழாவில், 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்சகான உபயதாரர்கள் வரவேற்கப்பட்ட நிலையில்,  அன்னதானம் வழங்க நகரில் 112 பேருக்கும், கிரிவலப்பாதையில் 114 பேருக்கும் என மொத்தம் 336 பேருக்கு நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கி உள்ளார். மேலும், நியமன ஆணை இல்லாமல் அன்னதானம் வழங்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.