சென்னை: சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்பட 35 பேருக்கு வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், முக்கிய நபரான ஹரிஷ் என்பவர் தலைமறைவானதாக தகவல் வளியாகி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில், நடிகர் வடிவேலு, இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டி யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட  பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இந்த விழாவில், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார்.

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு  ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் க பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். போலி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் நீதிபதி ஒருவர் கலந்துகொண்டதும் கடும் விமர்சனங்களுக்காகி உள்ளது.

சினிமா, சமூகப்பணி, அரசியல் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி போலி பட்டம் மற்றும் விருதுகள் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தெரியாமல், அண்ணா பல்கலைக்க வளாகத்திற்குள்ளேயே, போலி டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்த, அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் வேல்ராஜ், காவல்துறையில்புகார் அளித்தார். . இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த  அமைப்பின் இயக்குநரை தேடினர். அதற்கு  ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.