திருவண்ணாமலையில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைதாகி, ஜாமினில் வந்த போலி மருத்துவர் ஒருவர், மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலைச் சேர்ந்தவர் ஆனந்தி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், மருத்துவர்கள் சிலரிடம் உதவியாளராக இருந்தபோது, பேன்சி ஸ்டோர் ஒன்றை துவக்கியிருந்தார். அந்த பேன்சி ஸ்டோரில் ரகசிய அறை அமைத்து, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தார். கடந்த ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்ட ஆய்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக ஆனந்தி கைது செய்யப்பட்டதோடு, அவரது பேன்சி ஸ்டோருக்கு சீலும் வைக்கப்பட்டது. குண்டர் சட்டத்தில் கைதான ஆனந்தி, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் வெளிமாவட்டங்களுக்கு சென்று ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பு செய்ய அவர் வந்துள்ளதாக காவலர்களுக்கு தகவல் கிடைக்க, அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வரும் தகவல் கிடைத்ததால் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் உள்ள அவரது வீட்டிற்கு தப்பிச் சென்ற ஆனந்தி, அங்கே பதுங்கி இருந்திருக்கிறார்.
எதேட்சையாக அவரது வீட்டில் சோதனையிட காவல்துறையினர் உள்ளே செல்ல முயன்றபோது, ஆனந்தி காவலர்களிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே 3 முறை கைதான ஆனந்தி, தற்போது 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.