சென்னை: தமிழ்நாட்டில், நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,   தமிழ் நில வலைதளத்தில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான  நில அளவீடு செய்ய மக்கள் இதுவரை நேரில் சென்று அதிகாரிகளைப் பார்த்து விண்ணபிக்க வேண்டியிருந்தது. இதனால் கால தாமதம் மற்றும் கையூட்டு பிரச்சினைகள் எழுந்தன. இதையொட்டி, தமிழ்நாடு அரசு ஆன்லைன்மூலம் நிலம் தொடர்பாக சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்தொடர்ச்சி,   நிலம் அளவீடு செய்ய மக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் அவர்களின் நிலம் அளக்க வரும் தேதி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரரின் செல்போனுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,   நிலம் அளவை தொடர்பாக, அந்த பகுதி  அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2023 ஆம் ஆண்டே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை இ-சேவை மையங்கள் மூலம் பெற முடியும். நில உரிமையாளர்கள் இ-சேவை மையங்களை அணுகி தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், அட்டவணைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு தேதி விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

கணக்கெடுப்பு முடிந்ததும், நில உரிமையாளர் மற்றும் சர்வேயரின் கையொப்பத்துடன் அளவிடப்பட்ட நிலத்தின் வரைபடம் போர்ட்டலில் பதிவேற்றப்படும், பின்னர் விண்ணப்பதாரர் https://eservices.tn.gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.