பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில், முகக்கவசங்களை (mask)  விளம்பரம் செய்வதற்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. வணிக நிறுவனங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், முககவசங்களை விற்பனை செய்து வரும் நிலையில், அதிரடியாக தடை விதித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை  உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் 3825 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல நாடுகளில்  பொதுமக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றன. இதனால், உலகம் முழுவதும் முகக்கவசங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாடு வணிகர்களால் உருவாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில், மருத்துவ முகக்கவசங்களை விளம்பரம் செய்வதற்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான  அச்சத்தை பயன்படுத்தி, விதிகளை மீறி வணிக நிறுவனங்கள்  லாப நோக்கத்தில் முகக்கவசம் விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்கும் நோக்கில்,  ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் முகவசம் தொடர்பான விளம்பரங்கக்கு தற்காலிக  தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், தெரிவித்துள்ளது.