“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன:
சுந்தரி செல்வராஜ்
பெண்கள் நலன் குறித்த அக்கறையால் சொல்லப்பட்டது என்பதை மறுக்க இயலாது. அதே நேரம், நண்பர்கள்,உறவினர்கள் மட்டுமே பார்க்கும் படியாக பேஸ்புக்கில் புகைப்படங்களை வைக்கலாம் என்கிறார் ஆனால் அப்படி வைத்த பலருக்கும் சங்கடங்கள் நேர்ந்தது உண்டு.
ஆகவே இதனால் மட்டும் பெண்கள் பாதுகாக்கப் படுவதில்லை.. வெளியில் நடமாடும் போது யார்,எங்கு,எப்படி உங்களை படம் பிடிக்கின்றார்கள் என்றே தெரியாமல் எடுக்கலாமே. அப்படிப்பட்ட வக்கிர மனம் கொண்டவர்களுக்காக வெளியில் நடமாடாமல் இருக்க இயலுமா? பேஸ்புக்கிலே இல்லாதவர்கள் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை நெட்டில் போடுவேன் என்ற ப்ளாக் மெயிலும் நடந்து கொண்டுதானே இருக்கிறது..அவர்களுக்கு என்ன சொல்வீர்கள்? புகைப் படங்களே எடுக்காதீர்கள் என்றா?? பிரச்சனைக்கு இது முழுமையான தீர்வு அல்ல!
நான் எனது நண்பர்கள்,உறவினர் மட்டுமே பார்க்கும் படியாகத்தான் பதிவுகளும் புகைப் படமும் வைத்துள்ளேன்..பொதுவில் முக்கியமான சில பதிவுகளை மட்டுமே( இயற்கை பாதுகாப்பு போல பிரச்சனை பற்றிய பதிவுகள்) போட்டிருக்கின்றேன்.
அறியாதவர்கள் இன்பாக்ஸில் வந்தால் திறப்பதே இல்லை.
என் தோழிகள் சிலருக்கு முகநூலில் சில சங்கடங்கள் நேர்ந்தது உண்டு. முகநூலில் இயங்கும் தோழிகள் சிலர் சேர்ந்து முகநூல் பாதுகாப்புக்கென தனிப்பட்ட முறையில் செயல் படுகிறோம். தவறாக யாராவது புகைப் படங்களை வெளியிட்டால் குழுவில் அனைவரும் ரிப்போர்ட் செய்து புகைப் படத்தை நீக்கச் செய்திருக்கின்றோம்