சென்னை:
சென்னையில் பைக்கில் சென்ற பெண்களிடம் துணிகர வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனர் கொள்ளையர்கள். அவர்களிடமிருந்து தப்பும் முயற்சியில் பைக்கில் இருந்து விழுந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். பைக் மோதி ரோட்டில் சென்ற முதியவரும் உயிரிழந்தார்.
சென்னை, சாந்தோம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில், நேற்று இரவு 10.30 மணியளவில் பள்ளி ஆசிரியையான நந்தினி மற்றும் அவரது தோழி லட்சு என்ற காயத்திரி ஆகிய இருவரும் பணம் எடுத்தனர். பிறகு ஒரே ‘டூவிலரில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நந்தினி
நந்தினி

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில், பைக்கில் வந்த கொள்ளையர்கள் இருவர் காயத்திரியின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல எத்தனித்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி “கொள்ளை.. கொள்ளை” என்று குரல் கொடுத்தபடியே, கொள்ளையர்கள் சென்ற பைக்கை தனது டூவீலரில் விரட்டி சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த  கொள்ளையர்களில் ஒருவரான கருணாகரன், நந்தினியின் பைக்கை காலால் எட்டி உதைத்தான். இதனால் நிலைதடுமாறிய டூவீலர், சாலையில் சென்ற சேகர் என்ற முதியவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பைக் மின் கம்பத்தில் மோதியது. இதில் நந்தினி பலியானார். காயத்திரி படுகாயமடைந்தார்.  மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொள்ளையர் பைக்
கொள்ளையர் பைக்

இந்த சம்பவத்தை கண்டு  கோபமடைந்த அந்த பகுதி மக்கள், வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அப்போது கொள்ளையர்கள் தங்கள் பைக்கை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடினர். அவர்களி்ல் கருணாகரன் மட்டும் சிக்கினான். அவனை மக்கள் அடிக்க ஆரம்பித்தனர். உடனே மயக்கம் வந்ததாக படுத்துவிட்டான்.
கொள்ளையன் கருணாகரன்
கொள்ளையன் கருணாகரன்

இதற்கிடையே, கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கை ரோட்டில் போட்டு மக்கள் தீ வைத்தனர்.  சீனிவாசபுரம் டாஸ்மாக் மதுக்கடை அருகே விபத்து நடந்ததால், அந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு நேரில் வந்த சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார்.
“பொது இடத்தில் வைத்து சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது,  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டபோது,  “அது தனிப்பட்ட கொலை. இதைவைத்து சட்டம் ஒழுங்கு சரியிலலை என்று சொல்வது தவறு” என்று ஆளுங்கட்சியினர் சார்பில் பேசப்பட்டது. ஆனால் நேற்று நடந்தது ஆதாயக்கொலை. இதுதான் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா” என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.