பாரிஸ் :

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் நேரத்தில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் புதுப் புது உத்திகளைப் புகுத்தி சம்பாத்தித்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது லூயிஸ் வுட்டோன் (LV) என்ற சர்வதேச வியாபார நிறுவனமும் இணைந்திருக்கிறது.

இந்நிறுவனம் தயாரித்துள்ள முக பாதுகாப்பு கவசம் நேர்த்தியாகவும், ஸ்டைலாகவும் வடிவமைத்துள்ளது, இதன் விலை 961 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,610.

இவ்வளவு விலைக்கு அப்படி என்னதான் இருக்கிறது இந்த பாதுகாப்பு கவசத்தில் என்று கேட்டால், இதன் வடிவமைப்பு தான் இதன் விசேஷம் என்று சொல்லும் அந்த நிறுவனம், இதன் கண்ணாடி சூரிய ஒளிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் படைத்த லென்ஸால் ஆனது, இதனை தொப்பி போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. அதுமட்டுமல்ல, தங்கள் நிறுவனத்தில் பெயரை (LV) இந்த கவசத்தில் தங்கத்தில் பொறித்திருப்பதாகவும் பெருமையுடன் கூறுகிறது.

இந்தியாவிலும் அனிடா டோங்கிரி மற்றும் மசாபா குப்தா போன்ற வடிவமைப்பாளர்கள் இதுபோன்று பிரத்யேக வடிமைப்பில் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்திருந்தாலும், லூயிஸ் வுட்டோன் வடிவமைத்திருக்கும் இந்த முக பாதுகாப்பு கவசம் தான் அதிக விலைக்கு விற்கப்பட இருக்கும் கவசம் என்பது குறிப்பிடத்தக்கது, எல்.வி. நிறுவனம் இந்த முக பாதுகாப்பு கவசத்தை அக்டோபர் 30 ல் விற்பனைக்கு விட இருக்கிறது.