சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது. இந்த கொரோனா வீரியமில்லாத தொற்று என்று கூறி வரும் நிலையில், இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 215 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இணை நோயால பாதிக்கப்பட்ட பலர் மீண்டும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், கொரோனா பரவல், அந்த அளவிற்கு தீவிரம் இல்லை. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விழா முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.