மென்லோ பார்க், கலிஃபோர்னியா

முகநூல் உலகுக்கு நன்மை செய்கிறதா?” என்னும் தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை முகநூல் நிறுவனம் நடத்தி வருகிறது.

முகநூல் உபயோகிப்பவர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக தகவல்கள் வெளியாகின.    இதை முகநூல் அதிபர் மார்க் ஜுகர்பெர்க் ஒப்புக் கொண்டார்.   இது சமூக வலைத்தள உலகில் பரபரப்பை உண்டாக்கியது.   இதை ஒட்டி பலரும் முகநூலை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர்.

முகநூல் தனது வாடிக்கையாளர்களிடம் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டது.    மேலும் பல செயலிகளை நீக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது.   இதன் மூலம் மக்களிடையே இழந்துள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க நிர்வாகம் இவ்வாறு செய்வதாக கூறப்பட்டது.

தற்போது முகநூல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் மட்டும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.   இந்த கருத்துக் கணிப்பில் “முகநூல் உலகுக்கு நன்மை செய்கிறதா?”  எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.      இந்த கருத்துக் கணிப்பு குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் சொல்ல முகநூல் மறுத்துள்ளது.