மார்த்தாண்டம்:
குமரியில் நேற்று இரவு விடிய விடிய கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழர்ச்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக குமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பெருஞ்சாணி பகுதியில் 86.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது, அடுத்ததாக புத்தன்அணை பகுதியில் 84.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது போன்று 18 அடி மொத்த கொள்ளளவு கொண்ட சிற்றார் 1 அணைக்கு 17 அடி எட்டியுள்ளது வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வரத்து தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது இதனால் தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளான சிதறால், திக்குறிச்சி, குழித்துறை, பரக்காணி, வைக்கலூர் போன்ற தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.