அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்
நமது புராணங்களும், ஆன்மீக பெரியோர்களும் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நாம் இப்போது வாழும் வாழ்க்கை நிலை ஏற்படுகிறது என திடமாக கூறுகின்றனர். நமக்கு ஏற்படும் உடல் சார்ந்த நோய்கள் கூட அப்படி கர்ம வினைகளால் ஏற்படும் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய நோய்கள் ஏற்பட்டவர்கள் சென்று வழிபட்டாலே நோய்கள் நீங்கும் அற்புத தலமாகக் காஞ்சிபுரம் அருள்மிகு ஜுரஹரேஸ்வர் திருக்கோயில் இருக்கிறது. அக்கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு மேலும் தெரிந்து கொள்ளலாம்.
அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் சிறப்புக்கள்
சுமார் 2000 ஆண்டுகள் மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் ஜுரஹரேஸ்வரர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
தல புராணங்களின் படி தாரகன் என்கிற அசுரன் சிவபெருமானால் மட்டுமே தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் என்கிற வரத்தைப் பெற்றிருந்தான். எனவே தேவர்களை அவன் மிகவும் துன்புறுத்தி வந்தான். இதனால் மனம் நொந்த தேவர்கள் சிவபெருமானிடம் தாரகனிடமிருந்து தங்களை காக்குமாறு வேண்டினார். சிவனும் அவர்களைக் காப்பதாக உறுதியளித்தார். ஆனால் காலம் போய்க்கொண்டேயிருந்தது சிவபெருமானோ ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்தார், அவரின் தவத்தை மன்மதனைக் கொண்டு கலைக்க முயன்ற தேவர்கள், சிவபெருமானால் மன்மதன் அழிக்கப்பட்டதைக் கண்டு பயத்தில் ஆழ்ந்தனர்.
பிறகு தேவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானுக்குரிய ஸ்தோத்திரங்களைத் துதித்த போது மனங்குளிர்ந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஒரு ஒளிச்சுடரை அக்னி தேவனிடம் கொடுத்தார். அக்னி பகவானின் வயிற்றை அந்த ஒளிச்சுடரின் வெப்பம் தாக்கியது. பிறகு தேவர்கள் அனைவரையும் அந்த ஒளிச்சுடரின் வெப்பம் தாக்கியதில் அவர்கள் அனைவரும் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல் உடல் வெப்பம் மிகுந்து துடித்தனர். பின்பு சிவனையே தேவர்கள் சரணடைந்த போது, சுரன் என்கிற அசுரனை அழித்து பின்பு காஞ்சி நகரில் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் தான் கோயில் கொண்டுள்ளதாகவும், அந்த லிங்கத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் எனக் கூறி அருளினார் சிவபெருமான்.
ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் போன்று இக்கோயிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் கருங்கல்லாலான ஜன்னல் இருக்கிறது.
மிகப் பழமையான கோயில் என்பதால் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருக்கிறது. ஜுரம் காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோயில் அமைவிடம்
அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.