சென்னை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  ஆகவே, கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிறகு உபரிநீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது உபரி நீர் வெளியேற்றம் 4 ஆயிரம் கன அடியில் இருந்து 402 கன அடியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.65 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,028 கன அடியாகவும் உள்ளது.