சென்னை

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. எனவே நேற்று செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி 1,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று உபரி நீர் திறப்பு 2,429 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படும் உபரி நீர் வடிந்து செல்லும் ஆற்றங்கரையில் உள்ள சிறு களத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.