கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து அண்ணாமலையின் ஆர்டிஐ மூலம் தெரிந்து கொண்ட பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய பேச்சு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது என்றும் பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சீன ஆக்கிரமிப்பு குறித்து தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்ட பிறகும் தட்டிக் கேட்க முடியாத பலகீனமான நிலையில் உள்ள பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?

மக்களவை தேர்தலில் தமிழக மக்களின் நலனில் அக்கறை இருப்பதாக நாடகமாடுவதற்காக தான் கச்சத்தீவை பற்றி திடீரென இப்பொழுது பேசுகிறார்.

10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கோ, தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடியின் சுயரூபத்தை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள்.

கச்சத்தீவை திரும்ப எப்படி மீட்க முடியும் ? அப்படி மீட்க வேண்டுமென்றால் போர் தொடுத்து தான் மீட்க முடியும். வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது” என்று மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் கூறிய நிலையில் கச்சத்தீவு பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படுவதாக கூறியிருக்கிறார்.

இன்றைய நிலையில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராத நிலையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சிகளை ஒடுக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.