சென்னை:
கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில் போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில்கொண்டு அரசு புதிய உத்தரவை அறிவித்து உள்ளது.

தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான முதல் காலாண்டு முடிவிற்கான (30.6.21) வரியை அபராதம் இல்லாமல் செலுத்தும் கடைசி தேதியாக 15.5.21 அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் போக்குவரத்து வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜூன் 30-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உத்தரவால் மேலும் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள்.

இந்த உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.