சென்னை: ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் இறுதிவரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் அப்டோபர் 17-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை, உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த மாதம் 9ம் தேதி முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வாயிலாக 18ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து மென்பொருள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு இணையவழி விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17 லிருந்து 31ம் தேதி மாலை 5 மணி வரை நீடிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.