சென்னை:
சென்னையில் இருந்து புறப்படும் நான்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று ரெயில் நிலைய அதிகாரிக்கு வந்தது.
அதில், அரக்கோணம் அருகே நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களையும், மேல்மருவத்தூர் அருகே முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களையும் வெடிகுண்டு வைத்து வெடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அத்துடன் சில தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரெயில்வே மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களும் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கடிதத்தில் வந்துள்ள மிரட்டல் உண்மையா? அல்லது யாரையாவது சிக்க வைப்பதற்கான மிரட்டலா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் ரகசிய விசாரணையில், கடிதம் எழுதியது முன்னாள் ரெயில்வே ஊழியர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்த அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் கங்காரதரன் என்பதும், அரக்கோணம் பகுதியை சேர்ந்த முன்னாள் ரெயில்வே ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.