டில்லி

ந்தியாவில் ஒரு புறம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி நடைபெறும் ஏற்கனவே உள்ள வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வதேச ஆய்வு நிறுவனமான கிளெம்ஸ் ஓர்ல்ட் என்னும் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நிகழ்த்தி உள்ளது.    இந்த ஆய்வில் வங்கிகள்,பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் என பலதரப்பட்ட பிரிவுகளும் பங்கு கொண்டுள்ளன.    இந்த ஆய்வின் முடிவு குறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.   இந்த ஆய்வறிக்கை ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் பதியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி, “உலகெங்கும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.   புதிய வேலைவாய்ப்புகளை அனைத்து நாடுகளும் உருவாக்கி வருகின்றன.   அவ்வகையில் இந்தியாவும் பல புதிய துறைகளைக் கண்டறிந்து  வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.   அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள பல வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

கடந்த இரு வருடங்களாக விவசாயம், வனத்துறை, மீன் பிடித்தல், சுரங்கத்துறை, உணவு உற்பத்தி,  ஜவுளித்துறை, தோல் பொருட்கள், காகிதம், போக்குவரத்து துறை மற்றும் வர்த்தகம்  ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.   அதே நேரத்தில் 2014-15ல் 7.4% உம், 2015- 16ல் 8.2%ம் இந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருந்தது.

விவசாயப் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தினால் பலரும் விவசயத்தை கைவிட ஆரம்பித்ததால் இந்தத் துறையில் வேலைவாய்ப்பு குறைவு அதிகமாக உள்ளது.   அத்துடன் விவசாயத்தை விட்டு வேறு துறைக்கு செல்வோரில் பெரும்பாலானோருக்கு வேறு துறையில் பணிகள் கிடைக்காததால் அவர்கள் வேலையற்றோர் என்னும் நிலையில் உள்ளனர்.

அதே போல கட்டுமனத்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் புதிய வேலை வாய்ப்பு இல்லாததால் மற்ற துறைகளில் இருந்து வருவோருக்கு இந்த துறைகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

பணமதிப்புழப்புக்கு பின் இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் பல துறைகளிலும் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் அரசியல்வாதிகள் கூறும் நிலையில் வேலைவாய்ப்புக் குறைவு எவ்வாறு ஏற்படும் என்பது சர்ச்சைக்குரிய வினா என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்