சென்னை

நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியைத் தாண்டியதால் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவுடையது. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி மற்றும் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும்.

ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் தற்போது  22 அடியைத் தாண்டி உள்ளது. மேலும் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் போக்கி வழியாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றங்கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.