உங்களை நீங்களே அலசிப் பாருங்கள்…

Must read

நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
சேலத்தில் உயிரோடு இருக்கும் வயதான அண்ணனை குளிர்பதன சவப்பெட்டியில் வைத்து முடிவு வரை காத்திருந்து இருக்கிறார் அவருடைய தம்பி.
விஷயம் வெளியே தெரிந்து அண்ணன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தம்பி கைது செய்யப்பட்டுள்ளார் ..
வயதானவர்களுக்கு இதுபோல நேரும் கொடுமைகள் ஏராளம்.. பட்டினி போட்டு சாகடிப்பது.. படிப்படியாக உயிருக்கும் உலை வைக்கும் உணவுப் பண்டங்களை தொடர்ந்து கொடுப்பது..என அது ஒரு பெரிய பட்டியல்.. மனிதனுக்குள் இருக்கும் மனிதம் செத்துவிட்டதின் அடையாளம்.
நாம் அடிக்கடி சொல்வதுதான். நன்றாக நடமாடிக் கொண்டிருக்கும் போதே பொட்டென்று போய்விடவேண்டும் அது எந்த வயதாக இருந்தாலும் சரி.. வயதான காலத்தில் மற்றவர்களை சார்ந்து அவர்கள் சலித்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு வாழ்க்கையை பெற்றுக் போய் சேருவது என்பது கொடுமையிலும் கொடுமை ..
அதேநேரத்தில் எந்த நிலையிலும் வாரி அணைத்து காப்பாற்றும் ரத்த சொந்த பந்தங்களை பெற்றிருப்பது ஒரு வரம்.. கோடி கோடியாய் சொத்து வைத்து இருப்பவர்களுக்கு கூட இது கிடைக்காமல் போய்விடுவதுண்டு..
சேலம் சம்பவத்தைப் பார்த்து கொந்தளிக்கும் அனைவரும் யோசித்துப் பாருங்கள். உங்களை சுற்றியுள்ள முதியோர்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? பணம் கூட கொடுக்கத் தேவையில்லை. நாலு வார்த்தை அன்பாகப் பேசி இருப்பீர்களா?
நம் அனுபவத்தை சொல்கின்றோம்.. உறவினர் அல்லது தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றால் அங்கு வயதானவர்கள் இருக்கும்போது அவர்களிடம் கணிசமான நேரம் சந்தோஷமாக பேசுவோம். குறிப்பாக படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு வெளி உலகத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி பழைய இளமைக்கால விஷயங்களை கிளறி உற்சாகப்படுத்தி விடுவோம்.. அவர்கள் இளமைப் பருவத்தில் இருந்த காலகட்டத்தை மனதில் வைத்து அப்போதைய சம்பவங்களை கோர்த்து பேசினால் போதும்..வயதையும் நோயையும் மறந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
கடைசியாய் என் தந்தை அவர் வாழும் காலத்தில் நடந்து கொண்ட விதத்தை கடைபிடித்து கண்டிப்பாக முடிந்த அளவுக்கு அது நூறோ இருநூறோ மற்றவர்களுக்கு தெரியாமல் கையில் திணித்துவிட்டு கிளம்புவோம்.. அவர்கள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் தெரியும். அதற்கான பின்னணியில் சாம்பிளுக்கு ஒன்று சொல்கிறோம்..
என்னதான் பெற்ற பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொண்டாலும் எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை நம்பி இருக்க முடியாது கேட்கவும் முடியாது. அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளோ அல்லது உறவினர் குழந்தைகளோ வரும்போது அவர்கள் ஆசையாய் ஒரு பத்து ரூபாய் ரூபாய் எடுத்து கொடுத்து ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடு என்று சொல்லி சுதந்திரமாக கொடுத்துவிட முடியாது .
இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் தரும் சிறு பண உதவி அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். நீங்களும் முயன்று பாருங்கள்..
சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

More articles

Latest article