டில்லி

லைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை தமக்கு அளிக்க வேண்டும் என புகார் அளித்த பெண் கேட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் சீண்டல் புகார் அளித்தார். தாம் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் தம்மையும் தனது குடும்பத்தினரையும் காவல்துறையினர் நிறைய கொடுமைகள் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்ட அந்த புகார் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மீதான விசாரணை நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு அமர்வின் கீழ் வந்தது. மூடப்பட்ட அறையினுள் நடந்த இந்த விசாரணையின் போது புகார் அளித்த பெண்ணுடைய வழக்கறிஞர் வர அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தப் பெண் விசாரணையில் கலந்துக் கொள்ள மறுத்து விட்டார்.

புகார் அளித்த பெண் இல்லாமலே விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் என நற்சான்றிதழ் வழங்கப்பட்டு புகார் மனு நிராகரிக்கப்பட்டது

இந்த புகார் மனுவை அளித்த முன்னாள் பெண் உதவியாளர், “இந்த வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை எனக்கு அளிக்க வேண்டும். அதை பார்க்கும் முழு உரிமையும் எனக்கு உள்ளது. எனது புகாரை மதிப்பிற்குரிய நீதிபதிகள் எந்த காரணத்துக்காக நிராகரித்தார்கள் என்பதை புகார் அளித்தவர் என்னும் முறையில் நான் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாக இந்த புகாருக்கு முகாந்திரமில்லை என கூறி எனது புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் நான் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன் .   சட்டப்படி புகார் சுமத்தப்பட்டவர், புகார் அளிக்கப்பட்டவர் ஆகிய இருவருக்குமே விசாரணை குறித்த விவரங்கள் வழங்கபப்ட வேண்டும், பொது மக்களுக்கும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டு அறிந்துக் கொள்ள உரிமை உண்டு” என தெரிவித்துள்ளார்.