நியூயார்க்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவின் பேத்தியும் எழுத்தாளருமான பாத்திமா புட்டோ இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் நடந்த ஜெய்ஷ் ஈமுகமது இயக்க தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  அதற்கு பதிலடியாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் ஈ முகமத் தீவிரவாதிகளை இந்திய விமானப்படை அழித்தது.  நேற்று பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் போது துரத்திச் சென்ற விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானியர்களால் சிறை பிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவின் பேத்தி அதாவது அவர் மகன் முர்தாழா புட்டோவின் மகளும் மற்றொரு முன்னாள் பாக் பிரதமர் பேனசிர் புட்டோவின் மருமகளுமான பாத்திமா புட்டோ அமெரிக்காவில் வசித்து வருகிறார்.   புகழ் பெற்ற எழுத்தாளரான பாத்திமா புட்டோ இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், “நானும் என்னை போன்ற பல பாகிஸ்தான் இளைஞர்களும் எங்கள் வாழ்நாள் முழுவதும் போரிலேயே கழித்துள்ளோம்.  இனி எந்த ஒரு பாகிஸ்தானி வீரரோ அல்லது இந்திய வீரரோ மரணம் அடைவதை நாங்கள் விரும்பவில்லை.   இந்த இரு நாடுகளும் அனாதைகள் நிறைந்த நாடாவதை நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் தலைமுறை மக்கள் பாகிஸ்தானில் பேச்சு உரிமைக்காக போராடும் நிலை இருந்தது.   எங்களால் நாங்கள்  அமைதி குறித்து பேச எண்ணியும் அப்படி பேச முடியாமல் பயத்துடனேயே வாழ வேண்டி இருந்தது.  தற்போதுள்ள பாகிஸ்தான் மக்கள் வன்முறையால் கடுமையாக பாதிப்பு அடைந்துளனர்.  உலகில் யாரும் இதைப் போல் துயரபடதில்லை.

எங்கள் வரலாறு முழுவதும் ராணுவ கொடுங்கோல் ஆட்சியையும் பயங்கரவாத்தையும் மட்டுமே கண்டுள்ளது.   அந்த நிலை மேலும் நீடிக்காமல் தடுக்க பிடிபட்ட இந்திய விமானியை உடனடியாக விடுவிக்குமாறு நானும் என் போன்ற பாகிஸ்தானி இளைஞர்களும் அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்