சென்னை: தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98.

அதிமுக ஆட்சி காலத்தின் போது, மறைந்த எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டதுடன், மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவரும், திரைப்பட தயாராப்பாளருமான, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்.

அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானாதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வயது முதிர்வு காரணமாக வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த   ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று திடீரென மூச்சுத்திறணல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை   பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எம்.வீரப்பன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா உள்பட ஏராளமான படங்களை சத்யாமூவிஸ் என்ற பெயரில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.