சென்னை

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும் ஒருவர் ஆவார்.  இவர் 1980 முதல் 1990 வரை கிரிக்கெட் உலகில் புகழ் பெற்று விளங்கினார்.  குறிக்காக 1988-90  வரை நடந்த பல ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடி உள்ளார்.    இவர் 1987-88ல் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டு அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

சர்வதேச அளவில் இவருடைய விளையாட்டு பேசப்படவில்லை எனினும் உள்ளூர் அளவில் ஒரு மிகப் பெரிய மரியாதையுடன் சந்திரசேகர் இருந்துள்ளார்.   குறிப்பாக 1991-02 ரஞ்சிக் கோப்பையில் கோவாவுக்கு எதிரான போட்டியில் தலைவராக இருண்டு 572 ரன்கள் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.   அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்றினார்.

ஐபிஎல் போட்டிகள் தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திரசிங் தோனி இடம் பெற அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கு வி பி சந்திரசேகர் பரிந்துரை செய்துள்ளார்.   இவர் நேற்று இரவு தனது 57 ஆம் வயதில் மரணம் அடைந்துள்ளார்.   வி பி சந்திரசேகருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்

தற்போது வந்துள்ள செய்திகள் இவர் தற்கொலை செய்துக் கொண்டு மரணம் அடைந்ததாக தெரிவிக்கின்றன.

பல கிரிக்கெட் வீரர்கள் வி பி சந்திரசேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் சந்திர சேகரின் நண்பருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,  “என்னுடைய நண்பர் மற்றும் தொடக்க பேட்டிங் பார்ட்னர் மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்கு இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரவித்து கொள்கிறேன்” என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.