புதுடெல்லி:
10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மத்திய பாஜக அரசு, இந்தியாவில் பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த இடஒதுக்கீடு உடனே அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்றுதான் கூறப்பட்டு இருக்கிறதே தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். மேலும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் சமத்துவமான அரசியலமைப்பா? என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், பொதுப் பிரிவினருக்கான 50 சதவீதத்தில் இருந்து இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், அது குறித்து பதிலளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.