சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, வாழ்த்துப் பெற்றார்.
தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் 10ந்தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் 1,10,156 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளரை விட 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்து, அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என முன்பு கூறினீர்களே என்று எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த இளங்கோவன், ‘ஒவ்வொரு கூட்டணி ஏற்படும்போதும் அரசியல் சூழ்நிலை மாறும். அதற்கேற்ப கருத்துகளை சொல்வது இயல்புதான். ஒரு காலத்தில் தவறான கருத்தைச் சொன்னால் அதை திருத்திக்கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு ஜனநாயகம் தோற்றது, பணநாயகம் வென்றது என்று கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், ‘வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் நியாயமாக நடந்தது என்று தென்னரசு கூறியிருந்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொடுத்த மாதிரி குற்றம்சாட்டுகிறார் என்றார்.
இதற்கிடையில், வரும் 10ந்தேதி சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி ஏற்க உள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.