சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும்  5கூடுதல் நீதிபதிகளை,  நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75.  ஆனால்,  58 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இன்னும் 17 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான ஸ்ரீமதி, பரதசக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை  நிரந்தர நீதிபதியாக குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

இவர்கள் 5 பேரும் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளான அவர்கள்  5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இதனை ஏற்றுக் கொண்டு 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ஐந்து பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.