சென்னை: ஒவ்வொரு புதன்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும்  காவல்அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி வருகிறார். போதைப்பொருட்களை ஒழிக்க கஞ்சா 2.0, 30 என்று அறிவித்துள்ளது நடவடிக்கை எடுப்பதாக கூறி வருவதுடன் அவ்வப்போது சைக்கிளில் சென்று ஆய்வு செய்வதாகவும் தனது சமுக வலைதளங்களில் படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். ஆனால், காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறைகளை கேட்க கூட காவலர்கள் முன்வருவது இல்லை. எதிர்க்கட்சிகளின் புகார்களை பதிவு செய்வது இல்லை. மேலும்,  தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களும், திருட்டு, மொள்ளமாறித்தனமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம் தீவிரமாகவே உள்ளது. புகார் கொடுப்பவர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதில், தமிழக காவல்துறை, குறிப்பாக சென்னை காவல்துறை மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.   தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு  அனைத்து மாவட்ட காவல் நிலையத்திற்கும்  சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் காவல் ஆணையர்களும் பொதுமக்களை சந்தித்து மனு பெற வேண்டும் என டிஜிபி உத்தரவு அளித்துள்ளார். புதன் கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெற வேண்டும். பொதுமக்களின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி கூறியுள்ளார்.