சென்னை: தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் சவால் விடுத்துள்ளார். இதன்மூலம் அதிமுகவை வசப்படுத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இபிஎஸ்-ஐ தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அவரை தனிக்கட்சி தொடங்குமாறு உசுப்பேத்திவிட்டு, அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் போடும் நாடகம் இது என விமர்சனம் எழுந்துள்ளது.

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ந்தேதி கூடியது. இதில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்த நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற  அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் அந்தப்பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என கூறும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தாம்தான் என்று கூறி வரும் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை கட்சியின் நிர்வாகிகளாக நியமித்தார். அதைத்தொடர்ந்து,  தமது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் கூட்டினார். சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன், அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது கட்டமான விமர்சனத்தை முன் வைத்தார். எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆசி இங்கு உங்களுக்கு உண்டு எனவும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எடப்பாடி தரப்பை கடுமையாக விமர்சித்தனர்.

இறுதியில் பேசிய ஓபிஎஸ்,  ஜெயலலிதாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டதை ரத்து செய்பவர்களை இந்த நாடு மன்னிக்குமா ? எனக் கேள்வி எழுப்பினார். எப்போதுமே அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பணம் மட்டும்தான் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், தைரியமிருந்தால் தனிக்கட்சி தொடங்கிப் பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார்.

பொதுக்குழுவுக்கு தாம் வரக்கூடாது என்பதற்காக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டிவர்,  டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால் அன்றைக்கே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று கூறியதுடன், அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தாம் வாக்களித்ததாக தெரிவித்தார்.

தமது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

இந்தக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டிராமச்சந்திரன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஓபிஎஸ் அணி தரப்பில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் எடப்பாடி தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் வகையில், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் அவர் தாக்கல் செய்த கணக்கு வழக்குகளை ஏற்று, இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றி உள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் எடப்பாடியை அதிமுக நிர்வாகியாக அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடியை கட்சியை விட்டு விலக வைக்கும் நோக்கில், தனிக்கட்சி தொடங்குங்கள் என ஓபிஎஸ் சீண்டி விட்டுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அதிமுகவில் மொத்தமுள்ள 75 பேரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64 பேரும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 பேர் மட்டுமே ஆதரவாக  இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராகிறார் இபிஎஸ்…! தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி…