டெல்லி: அதிமுக இடைக்கல பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கட்சி தொடர்பான வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் விரைவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைவராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அதிமுக தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது., இதற்கிடையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அதிமுக  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு,  சமர்பித்த வரவு, செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்று, அதை  இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதிமுக சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி மற்றும் அக்டோபர் 3ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 2021- 2022ம் ஆண்டுக்கான அதிமுக வரவு, செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் காரணமாக, அதிமுகவின் அதிகாரப்புர்வ தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதை எடப்பாடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டும் பட்சத்தில், உச்சநீதிமன்ற வழக்கு, எடப்பாடிக்கு சாதகமாகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.