என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு…

– ஏழுமலை வெங்கடேசன்

பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி, முகேஷ், தமிழில் டிஎம்எஸ் தெலுங்கில் கண்டசாலா, கன்னடத்தில் பிபி சீனுவாஸ் இன்னும் பிற மொழிகளில் எத்தனையோ பின்னணி பாடகர்கள் ஜாம்பவான்களாய் ஜொலித்தனர்.

அவர்களால் சில மொழிகளில் மட்டுமே ஜொலிக்க முடிந்தது. ஆனால் ஆண் பாடகர்களில் இந்தியா முழுக்க பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி ஜொலிஜொலித்து சாதனைகள் மேல் சாதனை படைத்த ஒரே ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே.

ஒன்றல்ல இரண்டல்ல 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள்… என்ன மாதிரியான சாதனை இது…

ஆனால் இந்த சிகரத்தை அவர் அவ்வளவு எளிதில் எட்டிவிடவில்லை. கல்யாண கச்சேரிகள் போல் எத்தனையோ  விதவிதமான நிகழ்ச்சிகளில் பாடிப்பாடிய பிறகே அவரை சினிமா வாய்ப்பு தேடிவந்தது.

ஆந்திராவில் பிறந்து எஞ்சினியரிங் படிப்பு கனவுடன் கிளம்பிய அவரை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே கொண்டாடும் அளவுக்கு வாழ்க்கை அமைந்துபோனது விசித்திரத்திலும் விசித்திரம்.

இன்று எஸ்பிபியின் பாட்டைக் கேட்டுத்தான் உறங்குகிறேன் என்று சொல்பவர்கள் லட்சோபலட்சம்பேர். அவரின் குரல் கேட்காமல் எங்கள் பயணமே முடியாது என்று சொல்பவர்களின் எண்ணிக்கை  ஏட்டில் அடங்காது.

அவர் பாடவந்தபோது இன்றைய விஜய் அஜித் போன்றோர் பிறக்கவேயில்லை. அவர்களின் தாய் தந்தையருக்கு திருமணம்கூட ஆகியிருக்காது.

தென்னிந்திய மெகா ஸ்டார்களான என்டிஆர், நாகேஸ்வரராவ், எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்குமார் தொடங்கி ரஜினி, கமல் தலைமுறையை கடந்து விஜய், அஜித் தலைமுறையில் நீந்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி காலம் வரை என நான்கு தலைமுறைக்கு பாடியவர் எஸ்பிபி.

திரையுலகில் எஸ்பிபியின் குரலுக்கே வயது 55.. ஆம் 1966 ல் பாடவந்தவர். கடந்த ஆண்டு மருத்துவமனைக்குப் போய் இறுதிப்பயணம் காணும் வரை பாடிக்கொண்டேதான் இருந்தார்.

ஓய்வென்பதேயில்லை என்றாகிபோன அவரின் மந்திரக்குரலுக்கு.

எஸ்.பி.கோதண்டபாணி தெலுங்கிலும், தமிழில் எம்.எஸ். விஸ்வநாதனும் ஒரே நேரத்தில் வாய்ப்பு கொடுத்தனர்.

தமிழில் பாடிய படமான ‘ஹோட்டல் ரம்பா’ வராமலேயே போய்விட்டது. ஆனால் 1969ல் எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்திற்காக கே.வி மஹாதேவன் இசையில் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் எஸ்பிபியை எங்கேயோ கொண்டுபோய்விட்டது.

இருந்தாலும் டிஎம் சௌந்தர்ராஜன் போல் ஒரு படத்திற்கு எல்லா பாடல்களையும் பாடுகிற வாய்ப்பு எஸ்பிபிக்கு கிடைக்கவில்லை, காரணம்…

எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார் என டாப் டூ பாட்டம் என்று சொல்வார்களே அதேபோல உச்ச நடிகரிலிருந்து உதிரி நடிகர் வரை எல்லோருக்கும் டிஎம்எஸ் பாடி கொடிகட்டிப் பறந்ததுதான்.

ஆனால் இதே எஸ்பிபி தமிழில் மொத்தம் 14 பாடல்கள் கொண்ட ஒரு படத்தில் 12 பாடல்களை பாடவைக்கப்பட்டார் என்பது எப்படிப்பட்ட வினோதமான காலமாற்றம்.

ஆம் கமல்-ரஜினி நடித்து எம்.எஸ்.விஸ்வநாதன் இன்னிசை மழைபொழிந்து 1979-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படம்தான் அது.

எம்ஜிஆர் சிவாஜி படங்களில் டிஎம்எஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அறிமுகப்படுத்திய எஸ்பிபியை என்றைக்குமே கைவிடவில்லை மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.

‘இயற்கை என்னும் இளையக்கன்னி’ என ஜெமினிகணேசனுக்கும் ‘பொட்டு வைத்த முகமோ’ என சிவாஜிக்கு பாடினாலும் அவையெல்லாம் ஸ்டார் வேல்யுகளுக்காக கொஞ்சம் சிரமப்பட்டு பாடவைத்த பாடல்கள். ஆனால் எஸ்பிபிக்குள் இருந்த கரகரப்பில்லாத குளோப் ஜாமூன் குரல் அது ஒரு அலாதியானது.

பால்குடம் (1969) படத்தில் ‘மல்லிகை பூ வாங்கிவந்தேன்’ என்றொரு பாடல், 70களின் எஸ்பிபி வெறியர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பாடல் அது.

இந்த குளோப் ஜாமூன் குரலை இரு திலகங்கள் அல்லாத படங்களில் சுதந்திரமாக பாடவிட்டு எம்எஸ்வி வளர்த்த விதம் விவரிக்க முடியாதது.

எம்ஜிஆருக்கு ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘பாடும் போது நான் தென்றல் காற்று’ என்றால், சிவாஜிக்கு ‘இரண்டில் ஒன்று என்னிடம் சொல்லு’, ‘யமுனா நதி இங்கே’, உத்தமன் படத்தின் ‘படகு படகு ஆசைப்படகு’  போன்ற பாடல்கள்.

இங்கே இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லவேண்டும். டிஎம்எஸ் பாதிப்பில் இருந்து விலகவிரும்பாத நிலையில்தான் இருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. ஆனால் எம்ஜிஆர் தனது படங்களில் தொடர்ந்து எஸ்பியை பாடவைத்தார்.

அதேவேளையில் இன்னொரு பக்கம் எஸ்பிபியின் குளோப் ஜாமூன் குரலை தான் இசையமைத்த வேறு பல நடிகர்களின் படத்தில் பயன்படுத்தி துவம்சம் செய்தார் எம்.எஸ்.வி.

ஜெமினி கணேசன் தயாரித்து நடித்து பாலசந்தர் இயக்கிய ‘நான் அவனில்லை’ படத்தில் வரும், “ராதா காதல் வராதா” பாடல் ஆறு நிமிடம்… எம்எஸ்வி வைத்திருந்த வாத்தியங்களை விட தன் வாயில் அதிகமாக வைத்திருந்து பாடியிருப்பார் எஸ்பிபி… எவ்வளவு ஏற்ற இறக்கம்!!

இதே போல கமலின் ‘மன்மத லீலை’ படத்தில் வரும் “மன்மத லீலை மயக்குது ஆளை” பாடல் ..

சொல்லத்தான் நினைக்கிறேன், அவர்கள், பயணம் (1976), நிழல் நிஜமாகிறது, மன்மதலீலை என அது ஒரு பெரிய பட்டியல்.

1974 இல் ‘கண்மணி ராஜா’ என்று ஒரு சிவகுமாரின் படம் அந்த படத்தில் “ஓடம் கடலோடும்” என்ற பாடலில் ‘ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன் ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்’ என்ற இரண்டு வரிகளை அடுத்தடுத்து திரும்பத்திரும்ப வேறுவேறு மாடுலேஷனில் பாட வைத்திருப்பார் எம்எஸ்வி.

எஸ்பிபியின் குரலை எந்த அளவுக்கும் வளைக்கலாம் குழைக்கலாம் இழுக்கலாம் என்பதற்கு அந்தப் பாடல் அச்சாரமாக திகழும்.

இப்படிப்பட்ட எஸ்பிபியின் குரலை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டனர் அப்போது தமிழ் திரையுலகில் கலக்கிக் கொண்டிருந்த வி.குமார், விஜயபாஸ்கர், சங்கர் கணேசன் போன்ற இசையமைப்பாளர்கள். இவர்கள் தனியாக ஒரு எஸ்பிபி குரல் சகாப்தத்தை உருவாக்கினார்கள்.

மாணவன் படத்தின், “கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்”,

கல்யாணமாம் கல்யாணம் படத்தின் “காலம் பொன்னானது, கடமை கண்ணானது”,

எங்கம்மா சபதத்தின் “அன்பு மேகமே இங்கு ஓடி வா”…

சுடரும் சூறாவளியும் படத்தின் “அன்பு வந்தது என்னை ஆளவந்தது”,

இதுபோல எழுபதுகளில் எஸ்பிபி தமிழில் பாடிய ஒவ்வொரு பாடலும் செம ஹிட். ரேடியோவில் விவித பாரதிக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அப்படியொரு வரத்தை பெற்றிருந்தது எஸ்பிபியின் மென்மையான குரல்.

இப்படிப்பட்ட சூழலில்தான் எஸ்பிபி வாழ்க்கையில் நேர்ந்தது ஒரு திருப்பம். அது இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த அற்புதமான தருணம்.

‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமான இளையராஜா இரண்டாவது மூன்றாவது  படம் என ‘பாலூட்டி வளர்த்த கிளி’, ‘உறவாடும் நெஞ்சம்’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார்.

“நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை” மற்றும் “ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்..” ஆகிய இரண்டு பாடல்களுமே கடிகாரத்தின் டிக் டிக் டிக் என்ற ஓசையை ஆரம்பமாக வைத்து இசைக்கோர்வை ஓடவிட்டு இருப்பார் இளையராஜா.

பல நூறு படங்களை பின்னாளில் இருவரும் இணைந்து பிண்ணப் போகிறார்கள் என்பதை இரு பாடல்களுமே அப்போதே அடித்து சொல்லியிருக்கின்றன.

கிட்டத்தட்ட கஷ்டப்பட்டு சதம் அடித்த நிலையில் எஸ்பிபியும் அப்போதுதான் எதிர்முனையில் கைகோர்த்த புதுமுக ஆட்டக்காரராக இளையராஜாவும் என புதுவிதமான காம்பினேஷன்.

எம்.எஸ்.வி-யை எதிர்கொள்ள கடுமையாகப் போராடிய இளையராஜா விதவிதமாக புதிய புதிய யுக்திகளை பாடல்களில் புகுத்த ஆரம்பித்தார்.

அத்தனை பரிசோதனை முயற்சிகளுக்கும் உட்பட்டு அனாயசமாக பாடி தள்ளினார் எஸ்பிபி..

சிவாஜியின் ‘நான் வாழவைப்பேன்’ படம் “திருத்தேரில் வரும் சிலையோ” பாடலில்,

“தாலாட்டு கேட்கின்ற மழலை இது…. தண்டோடு தாமரை ஆடுது”

மேலேயிருந்து இறங்கி இடையில் நின்று ஒரு விளையாட்டு விளையாடி விட்டு, குழைந்த படியே கீழே கரைந்து போவார்.

சக போட்டியாளர்களாக மலேசியா வாசுதேவன் கே ஜே ஜேசுதாஸ் ஆகிய இருவர் களத்தில் இருந்த நிலையில் எஸ் பி பி யின் ராஜ்ஜியம்தான் உச்சத்தில் இருந்தது.

சங்கர் கணேஷ் இசையா, ‘நீயா’ படத்தில் “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…”

கே.வி. மகாதேவன் இசையா, ‘ஏணிப்படிகள்’ படத்தின் “பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து…”

எம்எஸ்வி இசையா, இந்தா பிடி, “மை நேம் இஸ் பில்லா…”

கேட்ட இசையமைப்பாளர்களுக்கெல்லாம் தன் குரலை வாரி வழங்கினார் எஸ்பிபி, தொட்டதெல்லாம் துலங்கியது.

1980கள் முழுவதும் தமிழ் சினிமாவில் எஸ்பிபியின் அரசாங்கமே. ரஜினி கமலின் சொந்தக்குரல் போல அவர்களின் அத்தனை படங்களிலும் எஸ்பிபியின் ராஜ்யம்.

பார்வை தெரியாத பாத்திரம் பாடிய ‘ராஜபார்வை’யின், “அந்திமழை பொழிகிறது” பாடலாகட்டும், ரஜினியின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் “காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாலே”  பாடலாகட்டும், இளைஞர்களின் முணுமுணுப்பில் எஸ்பிபி கொடிகட்டி பறந்தார்.

அதுமட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்கமுடியாத அம்சமாகவே மாறிப்போயின அவரில் குரல்.

கமலஹாசனின் ‘சகலகலாவல்லவன்’ படத்தின், “இளமை இதோ  இதோ” பாடல் 1982ல் தொடங்கி இன்றளவும் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் எஸ்பிபியின் குரல் ஒலிக்க தவறுவதேயில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஓப்பனிங் சாங் என்றால், அது எஸ்பிபி பாடினால் மட்டுமே மெகா ஹிட் என்ற நிலைமையும் உருவானது.

ஆயுதபூஜை என்றால் ‘பாட்சா’வின்,  “நான் ஆட்டோக்காரன்” பாடல் ஒலிக்காத இடமேயில்லை. அதற்கும் முன்பாக ‘அண்ணாமலை’யின், “வந்தேன்டா பால்காரன்” பாடல்… அதையெல்லாம் விவரித்துக்கொண்டே போக நேரம் போதாது.

சாதாரண நடிகர் மோகனைக்கூட வெள்ளிவிழா கதாநாயகனாக்கியதில் இளையராஜாவுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே பங்கு எஸ்பிபிக்கும் உண்டு.

கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, நான்பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், இதயக்கோவில்  மெல்லத்திறந்தது கதவு என  மோகனுக்காக எஸ்பிபி பாடிய பாடல்கள்தான் எத்தனையெத்தனை ரகம்.

கமர்சியல் பாடல்களைப்போல, காவியப் படங்களிலும் அவரின் திறமை மெய்சிலிர்க்கவைக்கும் ரகமாகவே அமைந்தது.

சாஸ்திரிய சங்கீதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’ படத்தில் எஸ்பிபி பாடிய பாடல்களையெல்லாம் விவரிக்க தனி புத்தகமே தேவைப்படும்.

நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் மாநாடு என்று அரசியலில் தலைவர்களின் பெருமையை சொல்வார்களே அதுபோல எஸ்பிபியின் குரல் நின்றாலும் நடந்தாலும் ஓடினாலும் அது சாதனை படைக்கும் பாடல்களாகவே இருந்தன.

‘தளபதி’ படத்தின் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”யில் இளையராஜாவின் இசைக்கும் எஸ்பிபியின் குரலுக்கும் இடையே நடந்தது மெகா யுத்தம் என்றே சொல்லலாம். பக்கத்தில் பாடகி ஜானகி அம்மாவை வைத்துககொண்டு அவர் நடத்திய ஜாலங்கள் படத்திற்கு படம் வித்தியாசமானவை.

ஒரு கட்டத்தில் அவருடைய தினசரி வாழ்க்கையே சாதனை நாட்களாக மாறிப்போயின. 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பாடி ரெக்கார்ட் செய்யும் அளவுக்கு பின்னணி என்பது எஸ்பிபிக்கு சர்வசாதாரணமாக போய்விட்டது.

1981ல் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாரின் இசையில்தான் இப்படியொரு சாதனையை படைத்தார் எஸ்பிபி. தமிழில் ஒரே நாளில் 19 பாடல்கள்… இந்தியிலும் ஒரே நாளில் 16 பாடல்கள்.

தென்னிந்தியாவை தாண்டி இந்தி படத்தின் மூலம் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன எஸ்பிபியின் இனிமையான குரல். கமலின் முதல் இந்திப்படமான ‘ஏக் துஜே கே லியே’ படத்தின் பாடல்களே இதற்கு சாட்சி.

இன்றைக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழும் சல்மான்கானுக்கு 90களில் அவரின் சொந்தக்குரல் போலவே திகழ்ந்தார் தென்னிந்தியாவின் எஸ்பிபி, ‘மைனே பியார் கியா’, ‘ஹம் ஆப் கே ஹைகோன்’ படங்களெல்லாம் யோசித்து பாருங்கள்.

அது சல்மான்கானோ, அது சாதாரண கானோ,  எஸ்பிபி பாடினாலே தேவாமிர்தம்தான்.

1992 ல் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு ‘ரோஜா’ படத்தில் ‘காதல் ரோஜாவே’ என்று ஓப்பனிங் கொடுத்தது மட்டுமல்லாமல் இமான் வரையில் பல இசையமைப்பாளர்களோடு இசை ஜாலம் புரிந்தவர் எஸ்.பி.பி.

பாடியதோடு மட்டுமல்லாமல்  சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவும் வலம் வந்த எஸ்பிபி, மேடைக்கச்சேரிகள், டிவி ஷோக்கள் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கு கலக்காமல் விட்டதில்லை.

பாடு நிலா பாலு என போற்றப்படும் எஸ்பி பாலசுப்ரமணியம் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் அவர் பச்சை தமிழனாகவே வாழ்ந்தார், தனக்கு வாழ்வளித்த தமிழகத்தை விட்டு நகரவேயில்லை. சென்னையில்தான் அவர் மூச்சு இயங்கியது.

யாருமே எதிர் பார்க்காத வகையில் கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனா என்ற கொடிய அரக்கன் அவரை விண்ணுலகம் கொண்டு சென்றபோது அவருக்காக பல்வேறு மாநில அரசுகள் ராஜமரியாதையை செலுத்தின.

ஆனாலும் அவர் நிரந்தரமாக குடியேற விரும்பியது தமிழ் மண்ணில்தான், அப்படியே அரசு மரியாதையோடு அமைந்தும் போனது.

எஸ்பிபி என்ற இசை மேதையை பற்றி யார் எழுதினாலும் அவரை பற்றி எதை சொல்லாமல் தவிர்ப்பது என்ற போராட்டமே மிஞ்சும்.

ஒரே வரியில் சொன்னால், “இந்தத்தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என்று தனக்கே பாடிவிட்டுப்போன பாலு,  ‘பாரத ரத்னா’ விருதுக்கு  தகுதியுடைய இந்த நாட்டின் பொக்கிஷம்.