சென்னை:

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவை செய்பவர்களையும் இ- பாஸ் இல்லாமல் சென்னை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.

மாநிலத் தலைநகரான சென்னை கொரோனா வைரசால் முழு ஊர் அடங்கில் இருக்கும் நிலையில், சென்னை போலீசார் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குகின்றனர். ஆகையால் திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய பணியிடங்களுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் நகரத்தில் சில இடங்களில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை போலீசார் பால் முகவர்களையும், எல்பிஜி தொழிலாளர்களையும், tangedco பணியாளர்களையும் இ-பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.

அனைத்து பணியாளர்களுக்கும் தங்களுடைய நிறுவனங்கள் போக்குவரத்து பாஸ் எடுக்க அனுமதித்துள்ளனர். ஆனால் போலீசாரோ பக்கத்து மாவட்டங்களிலிருந்து வரும் பணியாளர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் அனுமதி மறுக்கின்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் எடுத்தாக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.இதனால் பணியாளர்கள் அரசாங்கம் தங்களுக்கு ஒத்துழைக்காததால் தாங்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவள்ளூரில் வசித்து பெட்ரோல் பம்ப் பணியாளர் ஒருவர் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். ஆனால் இவருக்கு செவ்வாப்பேட்டை மற்றும் திருமழிசை செக் போஸ்ட்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் சுழற்சிமுறையில் வேலை செய்வதால் எங்களுக்கு இ-பாஸ் வழங்கவில்லை. ரயில் மற்றும் பேருந்துகள் இயங்காததால் நாங்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் போலீசார் எங்களை குற்றவாளிகள் போன்று நடத்துகின்றனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலிருந்து பயணிக்கும்போது சில tangedco தொழிலாளிகளும் இதே போன்ற பிரச்சினையை சந்தித்துள்ளனர்.

செங்கல்பட்டில் இருந்து வரும் tangedco தொழிலாளி ஒருவர், நாங்கள் அடையாள அட்டையை காண்பித்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், எங்களிடம் இ-பாஸ் கேட்கின்றனர், நாங்கள் தினமும் சென்று வருவதற்கு எவ்வாறு இ-பாஸ் பெற முடியும்? இவ்வாறு அவர்கள் கடுமையாக நடந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.இதேபோன்று எல்பிஜி வினியோகஸ்தர்கள் பால் முகவர்கள் ஆவின் தொழிலாளர்களும் அல்லாடி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் நாங்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை அனைத்து சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம், நாங்கள் முன்னதாகவே அனைத்து கம்பெனிகளுக்கும் தங்களுடைய தொழிலாளர்களுக்கு இ பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தோம், ஆனால் அதை கடைபிடிக்காதது அவர்களுடைய தவறு என்று கூறியுள்ளார்.