யாழ் பல்கலை
யாழ் பல்கலை

இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவேயே அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத் தோன்றுவதில்லை.
முதற் பகுதியில் குறிப்பிட்டது போன்று, ஹாண்டி பேரின்பநாயகம் மற்றும் அவரது சகாக்களின் வழிகாட்டலில் மாணவர் காங்கிரஸ், பின்னர் இளைஞர் காங்கிரஸ் தமிழர்களை இன, மத எல்லைகளைக் கடந்து சிந்திக்கவைத்தது,
ஆனால் விரைவிலேயே இடதுசாரி அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சோவியத் யூனியனிலும் சீனத்திலும் சோஷலிசத்திற்கேற்பட்ட பின்னடைவுகள் உலகெங்கும் எதிரொலித்தன.
இலங்கையிலும் இடதுசாரிகள் வழிதவறினர். கொச்சையான இன முழக்கங்கள் வழியே பிற்போக்கு இயக்கங்கள் செல்வாக்கு பெற்றன. அவர்களது வரம்பற்ற வன்முறை சமூகத்தினை தலைகீழாக புரட்டிப்போட்டது.
பொன்னம்பலம் அருணாச்சலம்
பொன்னம்பலம் அருணாச்சலம்

 
பெரும்பான்மையினரின் ஆட்சி நமது மனசாட்சியைக் கொன்றுவிடுவதில்லை எனும் அற்புதச் சொற்றொடர் ஹார்பர் லீயின் புகழ் பெற்ற ‘To kill a mockingbird’ எனும் புதினத்தில் இடம்பெறும்.
தவறாகக் கொலைக்குற்றம் சாட்டப்படும் கறுப்பர் ஒருவருக்காக, தன் எதிர்காலம், புகழ், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீவிரமாகப் போராடும் ஒரு வெள்ளை வழக்கறிஞரே அந் நாவலில் நாயகன். அத்தகைய மனிதர்களை உருவாக்கும் களமாக பல்கலைக் கழகங்கள் செயல்படவேண்டும். ஆனால் யதார்த்தங்களோ நம்மை பதறவைக்கிறது.
மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் (UTHR(J)  இரண்டாவது அறிக்கையில் தோழர் ராஜினி குறிப்பிட்டார்: ”மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்திக்கொண்டிருந்த நேரத்திலேயே நாங்கள் சுயவிமர்சனத்திலும் இறங்கினோம். தொடர்ந்து விவாதித்தோம். நமது வரலாற்றை பாரபட்சமின்றி ஆராய்ந்து, நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என கணிக்க முயன்றோம். நீதி ஒன்றுதான் எங்களின் ஒரே அளவுகோலாகவிருந்தது. எனவேயே நாங்கள் போராளிக்குழுக்களையும் விமர்சித்தோம், அவர்களது பயங்கரவாத்த்தினால்  தேவையற்ற அழிவுகள், அவலங்கள் என நாங்கள் சுட்டிக்காட்டினோம்…”
இளஞ்செழியன்
இளஞ்செழியன்

ஏறத்தாழ ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமுமே போராளிகளின் பயங்கரவாதத்தின் முன் விக்கித்து நின்றபோது, நாங்கள் டாக்டர் ராஜினியுடன் இணைந்து செயல்பட்டு விவாதத்திற்கான, ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கான வெளியினை உருவாக்க முயன்றோம். வன்முறையால் மிரண்டுபோன பலருக்கு ராஜினியின் செயற்பாடுகள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன.  ஆனால் அவரது அரிய பணி துவங்கிய சில காலத்திலேயே அவர் கொலையுண்டார்.
விடுதலைப்புலிகள் அவரைக் கண்டு அஞ்சினர். விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு, தங்களை மக்கள் கேள்வி கேட்கத்துவங்கிவிடுவார்களோ, தங்கள் ஆதிக்கம் தளர்ந்துவிடுமோ என்ற அச்சமே அது.
அவர் கொல்லப்பட்டார். கிடைக்கவிருந்த வெளியும் மூடப்பட்டது. முள்ளிவாய்க்காலை நோக்கிய அந்தக் கொடும் பயணத்தின் போது மக்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டனர்.
எப்படி இலங்கை அரசியல் தளம் இன மோதல் களமாக மாறியது என்பதை கடந்த பகுதிகளில் கண்டோம். அந்த சீரழிவே விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு வழிசெய்தது.
ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட இன்றைய நிலையிலும், வரலாற்றை மீளாய்வு செய்யும் முயற்சிகளுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகமே டாக்டர் ராஜினி திரனகாமாவை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது, அவர் பாதையில் எவரும் சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறது.
அவர் கொல்லப்பட்ட 25வது ஆண்டில், செப்டம்பர் 21, 2014 அன்று, நினைவஞ்சலிக்கூட்டம் நடத்துவதைக் கூட ராணுவத்துடன் சேர்ந்து தடுக்கமுயன்றது நிர்வாகம்.
இப்படிச் செய்து நீதி, உண்மை, மனித உரிமைகள் உள்ளிட்ட மதிப்பீடுகளை நிலைநாட்டுவதற்கான வாயில்களை பல்கலைக் கழகம் அடைத்துவிடுகிறது. நமக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளும் வழி இல்லாமல் போகிறது.
2011ல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கண்காட்சியில், ஆறுமுக நாவலர் தமிழ் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர், கிறித்தவ பாதிரிமாருக்கு எதிராகப் போராடி இந்து மதத்தைக் காத்தவர் எனப் போற்றப்பட்டார். அவரது அரசியல் வாரிசாக பொன்னம்பலம் ராமநாதன் சித்தரிக்கப்பட்டார்.
இவ்வாறாக அடித்தட்டு மக்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் அணுகுமுறைக்கு பல்கலைக்கழகமே மறைமுக அங்கீகாரம் அளித்தது
டொனமூர் ஆணையம் அனைவர்க்கும் வாக்குரிமையை உறுதி செய்தது என்பது மறைக்கப்பட்டு தமிழர்களை சிறுமைப்படுத்தும் பரிந்துரைகள் அவை என இன்றளவும் தூற்றப்படுகிறது.
இராமநாதனைக் கொண்டாடுவோர் அவரது தம்பி அருணாச்சலம் பற்றி பேசுவதே இல்லை. ஏனெனில் அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றவர். இளைஞர் காங்கிரஸ், கூட்டுறவு இயக்கம் போன்றவை இன வேறுபாடுகளுக்கப்பால் சமத்துவம் வேண்டும், சமூக நீதி வேண்டும் என்பதற்காக போராடியதை மட்டும் தமிழினவாதிகள் பேசுகிறார்களா என்ன?
 
சமத்துவம், சமூகநீதியைப் புறந்தள்ளும் எவ்வித அதிகாரப் பகிர்வும் அராஜகக் கூட்டத்தின் ஆட்சிக்கே வழிவகுக்கும் என்பதை நாம் என்றுமே நினைவில் கொள்ளவேண்டும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போர், விடுதலைப் புலிகளின் ஆட்சி இவற்றின் விளைவாய் சமூக அக்கறையுடையவர்கள் வெளியேறினர், பிற்போக்குவாதிகளின் கரங்கள் வலுப்பெற்றன.
ஆட்சியிலிருப்பது பிரிட்டிஷாராயிருந்தாலும் சரி, சிங்களர், விடுதலைப் புலிகள், டக்ளசின் ஆட்கள் எவராகயிருந்தாலும் சர், அவர்களுக்கு சாமரம் வீசி தங்கள் நலனை மேம்படுத்திக்கொள்வோரே இவர்கள்.
தமிழர் மத்தியில் உண்மையான மறுமலர்ச்சி ஏற்பட யாழ்ப்பாண பல்கலைக் கழகம் செம்மையாக செயல்படுவது அவசியம்.
சுயராஜ்ஜியம் வேண்டும் என 1930லேயே குரல் கொடுத்து ஒட்டு மொத்த நாட்டிற்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது இங்கே இயங்கிய இளைஞர் காங்கிரஸ்தான்.
இனச்சார்பின்மையினை போற்றி வளர்த்தது இங்கே துவங்கிய கூட்டுறவு இயக்கம். அவ்வியக்கத்தின் முயற்சிகளால்தான் அனைத்து தரப்பாருக்கும் பயன்படக்கூடிய பள்ளிகளும் மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன.
சமூக நீதிக்காக எத்தனை குரல்கள் எத்தனை போராட்டங்கள் – ஆயின் என்ன, இன்னமும் சாதி ரீதியான ஒடுக்குமுறை தொடர்கிறது.  கற்றறிந்தவர்கள் என்றாலும் கீழ்சாதியினர் என்பதாலேயே பலர் அவமானப்படுத்தப்படுகின்றனர்.
கோப்பாய் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக கீழ்சாதி மலர் சின்னையா செயல்பட்டதை மேல் சாதியினரால் ஜீரணிக்கமுடியவில்லை.  அவரை அகற்றிவிட்டுத்தான் அவர்கள் அமைதியானார்கள். அவர்களது அந்தக் கேவலமான முயற்சிக்கு வட மாகாணமும் ஒத்துழைத்தது. இது நடந்தது 2010 மார்ச்சில்.
அதே போல் பரம்சோதி தங்கேஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமானிப்பட்டத்தையும் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் அகதிகள் கற்கையில் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்றவர். தற்பொழுது தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினை மானிடவியல் துறையில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.
இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டுவரை கொழும்புப் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகவும் கொழும்பிலுள்ள திட்டமிடல் சேவைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆய்வாளராகவும் கடமையாற்றினார்.
இவர் சாதி, இடப்பெயர்வு, இனத்துவம் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றினை வெளியிட்டுவருகின்றார்.  பரவலான மதிப்பைப் பெற்றவர்.
ஐநாவில் பணியாற்றியபோது மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், தங்கேஸ் Casteless or Caste-blind: Dynamics of concealed caste discrimination, social exclusion and protest…”  – சாதி இல்லையா, அல்லது நாம் கண்களை மூடிக்கொள்கிறோமா, மறைக்கப்படும் சாதியம், எதிர்வினைகள் என ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அவர் சமூகவியலில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் திகழ்ந்தவர்.
அவரது துறையில் விரிவுரையாளர் நியமனத்திற்கான பேட்டியின் போது பேராதனை சமூகவியல் வல்லுநரான துணைவேந்தர் சாதி ஒடுக்குமுறை தொடர்கிறதா என்ற தங்கேசின் ஆராய்ச்சி முடிவுகள் தனக்கு உடன்பாடில்லை எனச் சொல்கிறார், வேலையும் மறுக்கப்படுகிறது.
பிரிட்டனில் தன்னுடைய பி எச் டியை முடித்தாலும் இனி அவருக்கு பேராதனையில் அவருக்கு வேலை கிடைக்கும் எனத் தோன்றவில்லை.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற மாய்மாலத்திற்கு அவர் விடும் சவால்கள் நிர்வாகத்திற்கு உவப்பில்லையே.
இவை போல ஆயிரம் எடுத்துக்காட்டுக்களைக் கூறமுடியும். தமிழ்ச் சமூகம் இன்னமும் முற்றிலுமாக நாகரிகம் அடைந்துவிடவில்லை.
தமிழர் பகுதி மீண்டும் செழித்து வளர்ந்தால் நாடும் செழிக்கும், சீரழிந்தால் தீவும் பாதிக்கப்படும். எனவே அப்பல்கலைக் கழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும்.
திறந்த மனதுடன் திறமையை எங்கு கண்டாலும் அதை ஏற்று, சம்பந்தப்பட்ட நபர்களை ஆசிரியர்களாக நியமித்து அவர்களுக்கு தேவையான சுதந்திரமும் கொடுத்தால், மேன்மேலும் சிறப்புடன் பல்கலைக் கழகங்கள் மிளிரும்.
எங்கே? எங்கும் பழமைவாதிகள் இனவாதிகள் குறுகியமனம் படைத்தோரின் ஆதிக்கம்தானே.
கொழும்பிலிருந்து உயர் அதிகாரிகள் அடிக்கடி வருவார்கள், நல்லவிருந்தோம்பல், பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு திரும்பிவிடுவார்கள்.
பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத, பொது நலனில் சற்றும் அக்கறை இல்லாத புள்ளிகளுடன் தான் அத்தகைய சந்திப்புக்கள், அதன் பிறகு அந்தத் துறைக்கு, இந்த ஆராய்ச்சிக்கு என கொழும்பிலிருந்து நிதி உதவி என அறிவிப்புக்கள் வெளியாகும். இதனால் யாருக்கு லாபம் என எவரும் சிந்திப்பதில்லை, தகுதி வாய்ந்தவர்கள் ஆசிரியப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்களா என்றும் ஆய்வு செய்வதில்லை. கொழும்பிலிருப்போருக்கு யாழ்ப்பாணம் எக்கேடு கெட்டால் என்ன,
சரி கொழும்பு ஆட்சியாளர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பதில் அக்கறை ஏதுமில்லை, புரிந்துகொள்ளமுடியும், ஆனால் இங்கிருக்கும் அரசியல் தலைமை என்ன செய்கிறது? அவர்கள் கவலைப்படவேண்டாமா?
பரம்சோதி தங்கேஸ்
பரம்சோதி தங்கேஸ்

 
அனைவர்க்கும் வாக்குரிமையா என அதிச்சி அடைந்த பொன்னம்பலம் ராமநாதனின் தம்பி அருணாசலம் இனக் காழ்ப்புணர்ச்சிகள் அற்றவர், அடித்தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
1901ல் அவர் தலைமையில் நடந்த மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையில், சிங்கள ரோடியாக்களும் இந்தியப் பறையரினத்தாரும் ஒரே சமூகத் தட்டில்தான் இருக்கின்றனர். ஆனால் கிறித்தவ பாதிரிகளின் முயற்சியின் விளைவாய் பறையர் மத்தியில் கல்வித் தரம் உயர்ந்துகொண்டிருக்கிறது, கற்றுத் தேர்பவர்கள் சமூகத்தின் மதிப்பைப் பெறுகின்றனர்.”  எனக் குறிப்பிடுகிறார் அருணாச்சலம்.
ஏன் பொன்னம்பலம் ராமநாதன் கூட தமிழர்களின் கல்வித் தரம் உயர அரிய பங்களிப்பு செய்திருக்கிறார். அவரும் வைத்திலிங்கம் துரைசாமியும்தான் இந்து வாரியப் பள்ளிகள் பல உருவாகக் காரணமாயிருந்தவர்கள்.
அதே போல இளைஞர் காங்கிரஸ் தலைவர்களும், கூட்டுறவு இயக்கத்தின் வீரசிங்கமும் ரகுநாதனும் அடித்தட்டுமக்கள் கல்வியில் மேலதிக கவனம் செலுத்தி அம்மக்கள் வாழ்வு மேம்படக் காரணமாயிருந்தனர்.
தொடர்ந்து அதிகாரப் பகிர்வு கோருகிறோம். அதிகாரம் கொழும்பில் குவிந்திருப்பதால் ஊழலும் அநீதியும் தலைவிரித்தாடுகின்றன, தமிழர்கள் கூடுதலாக பாதிக்கப்படுகிறோம், இந் நிலையிலிருந்து நாம் மீளவேண்டும் என்பதெல்லாம் சரி. ஆனால் ஒடுக்கப்படுவோருக்கு நீதியை மறுப்பதே இங்கே நியதியாய் இருக்கும்போது அவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் சமூகத் தலைவர்களாக இருக்கும்போது, அதிகாரம் கிடைத்தென்ன, கிடைக்காவிடின் என்ன?
 
ராஜினி திரனகாமா
ராஜினி திரனகாமா

அண்மையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 90 வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களுடன் கூடிய, தெரு ரவுடித்தனமும் சில கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
இதனையடுத்து, போதைப்பொருள் வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின் போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்
நீதிமன்றமும் பொலிசாரும் தெரு ரவுடித்தனத்தைக் கட்டுப்படுத்துவார்கள் அது அவர்களின் வேலை என கூறி சமூகப் பொறுப்புள்ளவர்களும் அரசியல்வாதிகளும் ஒதுங்கியிருக்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்களும், சமூகவிரோதச் செயற்பாடுகளினால் அச்சமடைந்துள்ள பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் சமூக சீர்கேடுகளைக் கவனிக்காமல் வேதனைக்குரியது.
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டுகின்ற அவர்கள், சமூகவிரோதச் செயற்பாடுகளினாலும் தெரு ரவுடித்தனத்தினாலும் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் அரசியல் செய்வதில் மாத்திரம் கரிசனையாக இருப்பது வருத்தத்திற்குரியது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
குற்றச் செயல்களினால் சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக உரிய இடங்களில் உரிய வேளைகளில் குரல் கொடுத்துச் செயற்படுவதற்கு அரசியல்வாதிகள், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் முன் வர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள், எனவும் நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட மிக அவலமானதொரு சூழலில் கூட்டங்கள் போட்டு உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டங்களில் உயிர்நீத்தோருக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துவதால் ஆகப்போவது ஏதுமில்லை.
முள்ளிவாய்க்காலை நாம் சென்றடைந்ததற்கு நாமே எந்த அளவு பொறுப்பு என நாம் நம்மைக் கேள்வி கேட்டுக்கொள்வதே இல்லை. பொருளற்ற சடங்குகளில் காலம் ஓடுகிறது.
சமூகத் தலைமைக்கு எது குறித்தும் அக்கறை இருப்பதைப் போல் தெரியவில்லை. அவர்கள் வளமாய் இருந்தால் சரி.
மற்றவர்கள் தான் ஆழமாக சிந்திக்கவேண்டும். ஆத்ம பரிசோதனை செய்யவேண்டும். உண்மை சமூக விடுதலை வேண்டுமெனில் முதலில் சமூக நீதிக்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்.
(தொடர் முற்றுப் பெறுகிறது)
நன்றி: பேராசிரியர் ராஜன் ஹூல்
மொழி ஆக்கம்: கானகன்