டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்து உள்ளது.

கொரானா காலக்கட்டத்தில் மருந்துக்களின் விலை உயர்வதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், தற்போது விலையை உயர்த்த அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,  ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் நிலை உருவாகி உள்ளது.

அதன்படி, வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7%  ஏப்ரல் 1ந்தேதி முதல் உயரும்  என்றும், கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ள  பாராசிட்டாமல் போன்ற மருந்துகள், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்பட  800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் 1ந்தேதி முதல் உயரும்.

மேலும்,  கொரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.