சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி..

கொத்து கொத்தாக கொரோனா வைரஸ் ,உயிர்களைக் குடித்து வருவதால் ஆட்கள் இடம் பெயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் விட்டு மாவட்டம் நகர வேண்டுமானால், ஆட்சியர் அனுமதி தேவை.

இந்த நிலையில் நானே ‘அரசன்.. நானே ஆட்சியர்’’ என்ற ரீதியில் பெண் மாஜிஸ்திரேட் ஒருவர் நடந்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சுங்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் அந்த மாஜிஸ்திரேட் ஈரோடு சென்றிருந்தார்.

வரும் போது, தனது சகோதரி உள்ளிட்ட இரு உறவினர்களைக் கோவைக்கு  அழைத்து வந்துள்ளார்.

மாஜிஸ்திரேட் உள்ளிட்ட மூவரையும் உள்ளே விட குடியிருப்பு வாசிகள் மறுத்து விட்டனர்.

’’நீங்களே சட்டத்தை மீறலாமா? உங்கள் உறவினர்களால் எங்களுக்கு கொரோனா பரவினால் யார் பொறுப்பு?’’ என்று குடியிருப்போர் கேட்ட கேள்விகளுக்கு, அந்த மாஜிஸ்திரேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.

போலீஸ், ஊடகங்கள் என விஷயம் எல்லை மீறிப்போன நிலையில், அங்கிருந்து உறவினர்களுடன்  கோபத்துடன் வெளியேறியுள்ளார் மாஜிஸ்திரேட்.

ஊடகங்கள், அந்த மாஜிஸ்திரேட்டை தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டனர்.

‘’ மேல் மட்ட நீதிபதிகளிடம் கலந்து பேசிய பின் உங்களுக்குப் பதில் சொல்கிறேன்’’ என்று சமாளித்துள்ளார், அந்த மாஜிஸ்திரேட்.

‘’ நீங்களே சட்டத்தை மீறலாமா? உங்கள் உறவினர்களால் ‘அபார்ட்மெண்ட்’ வாசிகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் என்ன ஆகும்?’’ என்று நிருபர்கள் கேட்டபோது-

பதில் சொல்ல மாஜிஸ்திரேட்டிடம் வார்த்தைகள் இல்லை.

.- ஏழுமலை வெங்கடேசன்