ஈரோடு
ஈரோடு காவல்துறையினர் சீமான் வெடிகுண்டு வீசுவேன எனப்பேசியது குறித்து நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.
சீமான் மீது ஏற்கனவே பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வடலூர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விவகாரத்தில் மூன்றாவது சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“பெரியார் பிறந்த மண்ணில் நின்றுதான் அவரை விமர்சிக்கிறேன்; உங்களால் என்ன செய்துவிட முடியும்? நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் கையில் இருப்பது வெடிகுண்டு. நீங்கள் என் மீது வெங்காயத்தை வீசுங்கள். நான் வெடிகுண்டை வீசுகிறேன்; என்ன நடக்கிறது என பார்ப்போம்”
என்று பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம், மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 20-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு நேரில் சென்று ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்கி உள்ளனர்.