ஈரோடு:  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து திமுக கூட்டணியினர் தற்போதே பட்டாசு வெடித்து தங்களது கொண்டாடங்களை தொடங்கி உள்ளனர்.

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதையொட்டி அந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.  காலை 9.20 மணி நிலவரப்படி இவிகேஎஸ் இளங்கோவன் 11ஆயிரத்துக்கும் அதிகமான  வாக்குகள் பெற்ற முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக 3767 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 368 வாக்குகளும், தேமுதிக 73 வாக்குகளும் பெற்றுள்ளன.