ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

 திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்  தென்னரசு, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.  இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருங்ததப்பட உள்ளது. அதாவது,  77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 78 பெயர், சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த பணி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.