ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத்தால் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. முன்னதாக, இன்று ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளராக தென்னரசு நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கடிதங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்கிறார். இதனால், அதிமுக வேட்பாளர்க எடப்பாடி ஆதரவு வேட்பாளர் தென்னரசுதான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரான செந்தில் முருகன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இதுவரை மொத்தம் 46 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் இன்று போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதை அவரது ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இதுவரை வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுத்தாக்கல் நாளை பிற்பகல் 3மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்நோக்கி உள்ள தென்னரசு கடைசி நாளான நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கே இரட்டை இலை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தேர்தல் நாளில் வாக்கு சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்று வருகிறது.