சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற  இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்  போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா திடீர் மரணத்தை தொடர்ந்து காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது. அதன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால்,  தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனால்,  காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது  இளைய மகன் சஞ்சய் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது வயது மூப்பு மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது இளைய மகன் சஞ்சய் போட்டியிடட்டும் என தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை தனது மகனுக்கு விட்டு கொடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் தேர்வை தேசிய தலைமையின் ஒப்புதலுக்காக காங்கிரஸ் தலைமையிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பிரசாரம் தொடங்கி உள்ளது.

[youtube-feed feed=1]