ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், முற்பகல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தநிலையில், மதிய வேளையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2021ல் நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி களமிறங்கியது. ஆனால், இதில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவிகேஎஸ் மகன் திருமகன் ஈவேரா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருடன் உடல்நலம்பாதிக்கப்பட்டு காலமான நிலையில், தற்போது இடைத்தேர்தல் அறிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து திமுக பெற்று, திமுக களமிறங்கி உள்ளது. அதன்படி, திமுக வேட்பாளராக முன்னாள் தேமுதிக எம்எல்ஏவும், தற்போதைய திமுக பிரமுகருமான சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக என எந்தவொரு கட்சியும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்ட நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே களமிறங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று தியம் திமுக வேட்பாளர் சந்திரகுமாரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அங்கு இரண்டு முனை போட்டி நிலவுகிறது. திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.
இந்த தொகுதியில், கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று சீத்தா லட்சுமி, சந்திரகுமார் ஆகியோர் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியின்வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது. வரும் 20ஆம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.