ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,  மதியம் 1 மணிவரை 44.56% வாக்கு பதிவு நடை பெற்றுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, திமுகவினர் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறுவதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். அதில்,” விதிமுறைகளை மீறி அசோகபுரம் 138, 139 வாக்குச்சாவடி அருகே திமுகவினர் கட்சிக் கொடியுடன் இருக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவும் செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கச்சேரி வீதியில் உள்ள 180-வது வார்டில் ஆதார் அடையாள அட்டையுடன் சென்றால் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதி மறுக்கின்றனர். இப்பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஜனநாயகத்தை காப்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணிவரை 44.56% வாக்கு பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.