சென்னை:  தமிழ்நாட்டில்  கடந்த 10ஆண்டுகளில்  70 புலிகள் இறந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் உள்ளன இந்தியாவில், புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்கள் உள்ளது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, வரையாடு, மான், கடமான், சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு, காட்டுக்கோழி உள்பட பல விலங்குகள் உள்ளன.

ஆனைமலை புலிகள் காப்பகம் மொத்தம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பொள்ளாச்சி, உடுமலை என இரண்டு கோட்டங்களாக செயல்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய 4 சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8 நாட்கள் நடந்தது.

மொத்தம் 48,617 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பொள்ளாச்சி வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வனக்காவலர், வேட்டைத் தடுப்பு காவலர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து புலி மற்றும் பிற விலங்கு கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இதில் பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் கால்தடம் பதிந்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் சிங்கவால் குரங்கு, வரையாடு, யானை, கட்டெருமைகளை நேரடியாக பார்த்தும் கணக்கெடுத்தனர். சேத்துமடை அடுத்த போத்தைமடை மற்றும் டாப்சிலிப் பகுதியில் புலியின் கால்தடம் பதிவாகியிருந்தது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட புலிகளின் தடம் மற்றும் பிற விலங்குகளின் தடத்தின் மூலம் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 70 புலிகள் இறந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.  தற்போதைய நிலையில், தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது இந்திய அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 10% ஆகும். இந்தியாவில், புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் உயிரிழந்த 70 புலிகளில் 44 புலிகள் சரணாலயத்தில் இறந்துள்ளன. ஏனைய புலிகள் சரணாலயத்திற்கு வெளியே இறந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.