சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதுடன் வேட்பாளர் பெயரையும்  அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தற்போது தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம், பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் இடைத் தேர்தல், செயற்குழு, பொதுக்குழு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  அப்போது,   இடைத்தேர்தலில் போட்டியிட்டு, பலத்தை நிரூபிக்க வேண்டும் என தேமுதிக  மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்டச் செயலாளர்கள்  கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் நடந்து முடிந்த தேமுதிக உட்கட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரமேலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்தே களமிறங்கவுள்ளதாக  கூறியதுடன், தேமுதிக சார்பில் ஈரோடு மாவட்ட செயளாலரான ஆனந்த்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.