சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முனைந்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் கொட்டும் மழையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7-வது நாளை எட்டியுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தை கைவிடுவதில்லை என்கிற முடிவில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், அவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், ஆசிரியர் போராட்டம் இன்னும் வேகம் எடுத்துள்ளது. ஆசிரியர்களின் போராட்டத்துக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி அறிவிக்கப்பட்டது. இதில், பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.