ஈரோடு: ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி ரூ.1கோடி கேட்டார்  என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி  ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கே.பி.முனுசாமி, நாளடைவில் ஓபிஎஸ்-ன் நடவடிக்கை பிடிக்காமல் எடப்பாடி அணிக்கு மாறினார். தற்போது தீவிர எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக இருந்து வருகிறார். தற்போது ஈரோடு தேர்தலில் எடப்பாடி கை ஒங்கி உள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதனால், எடப்பாடி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என பேசும் ஆடியோவை வெளியிட்டார்.

மேலும், கடந்த  2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன். அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர் செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, “கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்” என்றார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.